Actor Siddharth explain to police about tweet against Saina: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்தார்த், சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் காணொலி வாயிலான விசாரணையில் ஆஜராகி, சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறி இருந்தார்.
இதற்கு நடிகர் சித்தார்த் ட்விட்டரில் சாய்னா நேவாலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் கூறி இருந்தார். அவரது பதில் பெண்களை அவமதிப்பதாக சித்தார்த்க்கு கடும் கண்டனம் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையமும் கடுமையாக கண்டித்து சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த், ஆபாசமாக பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் எனக்கு இல்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
இதன்பின்னர் சித்தார்த்தை மன்னித்து விட்டதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கூறி இருந்தார். இதற்கிடையில் நடிகர் சித்தார்த் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று காணொலி வாயிலாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணையில் ஆஜரான நடிகர் சித்தார்த், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக கூறினார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் “விசாரணையின் போது நடிகர் சித்தார்த் விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைத்தார், மேலும் மதிப்பீட்டிற்காக செயல்முறை பதிவு செய்யப்பட்டது,” என்று கூறினார். தேவைப்பட்டால், விசாரணை அதிகாரிகள் மேலும் விசாரணைக்கு நடிகர் சித்தார்த்தை வரவழைப்பார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.