பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை, நாடக காதலன் ஏமாற்றியதால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென அந்த பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி தற்கொலை சம்பவத்தை அறிந்த மதுரவாயல் காவல் நிலைய போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், சிறுமியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு நோட்டில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த வாலிபர் அந்த சிறுமியை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ‘காதலன் ஏமாற்றியதால் நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்றும் அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.
இதனை அடுத்து சிறுமியை காதல் வலை வீசி ஏமாற்றிய அந்த நாடக காதலன் யார் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவியின் தோழிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.