கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டே இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக இன்று காலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெடின் 44வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ குழு ஒரு ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கியுள்ளது.
ஜியோபோன் நெக்ஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள உள்ள இந்த ஃபோனை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
இது அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் ஃபோன். இதில் கூகுளின் அனைத்து அப்ளிகேஷன்களும் கிடைக்கும். அதேபோல் ஜியோ அப்ளிகேஷனையும் பயன்படுத்த முடியும். அத்துடன் ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மூலம் பயனர்கள் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் முழுப் பயனையும் பெறலாம். உலகிலேயே மிகவும் மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போனாக ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும் என்றார்.
இந்த போன் வரும் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று கடைகளுக்கு விற்பனைக்கு வரும் என்றும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த போன் 2ஜியிலிருந்து 4ஜிக்கு அப்கிரேட் ஆக விரும்பும் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவரும் என ஜியோ நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இதற்காக கூகுள் பிர்தேயக் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி உள்ளது. திரையில் தோன்றும் தகவலை தானாகவே சத்தமாக ஒலிக்கச் செய்யும் read-aloud screen text வசதி இருக்கிறது. மொழிமாற்றம் வசதி, கேமரா ஆகியனவும் உள்ளன. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள் உள்ளன.
இதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.