பெங்களூரு
கர்நாடக அரசுக்குத் தைரியம் இருந்தால் தாம் ஜிஹாப் அணிந்து சட்டப்பேரவை வருவதைத் தடுக்கட்டும் என காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினர் கூறி உள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியில் ஜிஹாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது கடும் சர்ச்சையாக மாறி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஆடைகள் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தடை விதித்தது.
இது குறித்து மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் இஸ்லாமிய பெண் சட்டமன்ற உறுப்பினர் கனீஸ் பாத்திமா, “”நாங்கள் சீருடையுடன் பொருந்துவதற்காக ஹிஜாபின் நிறத்தில் மாற்றங்கள் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம், எங்களால் ஜிஹாப் அணிவதை விட்டுவிட முடியாது.
நான் சட்டசபைக்கும் நான் ஹிஜாப் அணிந்து தான் செல்கிறேன், அரசால் முடிந்தால் என்னைத் தடுத்து பார்க்கட்டும்.
இங்கு இஸ்லாமிய மாணவிகள் ஒடுக்கப்படுகிறார்கள்… தற்போது தேர்வுக்கு இரண்டு மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் கல்வி நிலையங்களில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. அனைவரும் இதை இதுவரை அணிந்திருந்த திடீரென்று ஏன் தடுக்கிறார்கள்?
உலகெங்கும் புர்கா அணிவது ஒன்றும் புதிதல்ல, அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த மக்களும் கலபுர்கியில் உள்ள டிசி அலுவலகத்திற்கு வெளியே திரண்டுள்ளோம், முதல்வரிடம் இது குறித்து ஒரு குறிப்பாணை அனுப்பிய பின்னர் நாங்கள் உடுப்பியில் போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.