தேனி : அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த மாவட்ட மகளிரணி நிர்வாகி ஒருவர், மீண்டும் அதிமுகவில் இந்த சம்பவம், அம்மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மாவட்ட மகளிரணி நிர்வாகியும், போடி நகர இணைச் செயலாளராகவும் இருந்து வந்தவர் முனியம்மாள். இவர் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போடி 24 வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக பொறுப்பு வகித்து உள்ளார்.
இந்த முறை அவருக்கு அதிமுகவில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அடுத்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து, போடி நகராட்சியின் 22 வது வார்டில் வேட்பாளராக களமிறங்கினார்.
கடந்த வெள்ளிக்கிழமை திமுக வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், நேற்று இரவு போடிக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில், முனியம்மாள் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
திமுகவில் சீட்டு வாங்கி வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், முனியம்மாள் தற்போது அதிமுகவில் இணைந்திருப்பது, தேனி மாவட்ட திமுக நிர்வாகிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதே சமயத்தில் போடி நகராட்சியின் 22 வது வார்டில் திமுகவின் மாற்று வேட்பாளராக கல்பனா என்பவர் அறிவிக்கப்படலாம் என்றும், முனியம்மாள் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.