தனியார் மருத்துவக் கல்லூரிமற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், 50 சதவீத எம்பிபிஎஸ்மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
கடந்த 3-ம் தேதி என்எம்சி வெளியிட்ட வழிகாட்டுதலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களான டிஒய்பாட்டீல் அல்லது பாரதி வித்யாபீடத்தில் மருத்துவம் பயிலும் 50% மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் செலுத்தினால் போதுமானது. தற்போது நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் முறைப்படுத்தப்படவில்லை.
தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தமட்டில் மாநிலகட்டண ஒழுங்குமுறை ஆணையம்(எப்ஆர்ஏ) தகுதி அடிப்படையிலான இடங்களை நிரப்புவதற்கான கட்டணத்தை மட்டும் நிர்ணயித்துள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் கட்டண விதிமுறைகளின் கீழ் வரும் வகையிலான பரிந்துரையை என்எம்சி அளித்துள்ளது.
பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என்எம்சி தெரிவித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ இடத்தைப் பெறும் மாணவர்கள் பலனடையும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என்எம்சி தெரிவித்துள்ளது.
இதை எதிர்த்து தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தை நாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் தகுதி அடிப்படையில் மருத்துவ இடங்களைப் பெறும் மாணவர்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியும்.
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம்இந்திய மருத்துவக் கவுன்சில் ஒருநிபுணர் குழுவை நியமித்தது. பின்னர் தேசிய மருத்துவக் கவுன்சில் இது தொடர்பாக 26 வழிகாட்டுதலை வெளியிட்டது. இதன் மூலம் மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டு இது தொடர்பாக 2021-ம் ஆண்டு மே மாதம் வரை பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டன. இது குறித்து 1,800-க்கும் மேலான கருத்துகள் வரப்பெற்றன. அதன் அடிப்படையில் புதிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.
என்எம்சி வெளியிட்டுள்ள பரிந்துரைகள் நியாயமான வகை யில் உள்ளதாக பெற்றோர் தரப்பு பிரதிநிதியான சுதா ஷெனாய் தெரிவித்துள்ளார்.