பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகள் வாங்கிக்கொடுத்த செல்போனில், இன்ஸ்டாகிராமில் பொழுதைப் போக்கிய பள்ளி மாணவி ஒருவர், காதல் வலையில் சிக்கி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகே தடாகம் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவ,ர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டதால், மாணவியின் பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த செல்போனில் மாணவி கல்வி கற்பதை விட்டுவிட்டு, இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலையில் சிக்கி உள்ளார்.,
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் கிடைத்து, இரண்டு பேரும் நட்பாக பழகி பின்னர், காதலித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ஒருவருக்கொருவர் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த காதல் விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வரவே, தங்கள் மகளை கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவி மிகுந்த மன வேதனையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
சம்பவத்தன்று பள்ளி மாணவி திடீரென வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். இதனையடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதற்கிடையே, பெற்றோர்கள் மாணவி குறித்து விசாரணை செய்ததில், தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, துடியலூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவியை தேடி வலைவீசி தேடி வருகின்றனர்.