பாங்காக்,-தாய்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய துாதரகத்தில் பெண்கள் கழிப்பறையில் ரகசிய ‘கேமரா’க்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துாதரக முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக். இங்கு ஆஸ்திரேலிய துாதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த துாதரகத்தின் பெண்கள் கழிப்பறையில் கேமரா பதிவு செய்யும் படங்களை சேமிக்க உதவும் ‘கார்டு’ இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. இதை தொடர்ந்து துாதரகங்களில் உள்ள கழிப்பறைகளில் சோதனை நடந்தது.
அப்போது பெண்கள் கழிப்பறையில் உளவு வேலைகளுக்கு பயன்படும் மிகச் சிறிய ‘கேமரா’க்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் துாதரகத்தில் பணியாற்றி வந்த பெண் அதிகாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து துாதரகம் அளித்த புகாரின் அடிப்படையில் தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் துாதரக முன்னாள் ஊழியருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஊழியர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து அரசு தெரிவித்து உள்ளது. கேமரா விவகாரம், ஆஸி., துாதரகத்திற்கு வந்து சென்ற பல வெளிநாட்டு பெண் பிரமுகர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement