லக்னோ: வாக்கு எண்ணிக்கை நாளான மார்ச் 7ம் தேதி மோடியையும், யோகியையும் அடக்கம் செய்வோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிந்த்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய் ராய் என்பவர் போட்டியிடுகிறார். அவர் ராஜேதாரா கிராமத்தில் தேர்தல் பிரசாரம் செய்த போது, தேர்தல் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய், கடந்த ஜனவரி 31ம் தேதி பிந்த்ராவில் போலீசாரின் முன்அனுமதி பெறாமல் பொதுக் கூட்டத்தை நடத்தினார். மேலும் அவர் தனது உரையின் போது, ‘மார்ச் 7ம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) நாங்கள் மோடியையும், யோகியையும் அடக்கம் செய்வோம்’ என்று பேசியுள்ளார். இவரைக் கைது செய்யக் கோரி பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து பூல்பூர் போலீசார் அஜய் ராய்க்கு எதிராக தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என்றனர். மேலும், பிந்த்ரா தொகுதி தேர்தல் அதிகாரியும், துணை ஆட்சியருமான ராஜீவ் ராயியிடம் கேட்டபோது, ‘அஜய் ராய் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஔிபரப்பு செய்த காட்சிகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக பிந்த்ரா தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அஜய் ராய், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2017 தேர்தலில் பாஜகவின் அவதேஷ் சிங்கிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.