திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது.
கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் மற்றும் இங்கு பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை அமலாக்க துறையும் விசாரிக்க தொடங்கியதை தொடர்ந்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக பணிபுரிந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிவசங்கரின் சஸ்பெண்டு உத்தரவு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இப்போது அவர் கேரள விளையாட்டு துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் சிவசங்கர் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். இப்புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த புத்தகத்தின் சில பகுதிகள் சமீபத்தில் வெளியானது. அதில் ஸ்வப்னா பற்றி பல தகவல்களை சிவசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஸ்வப்னாவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். 3 ஆண்டுகளாக பழகியுள்ளேன். தங்க கடத்தல் வழக்கில் சிக்கியதன் மூலம் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டார். அவர் எனக்கு துரோகம் செய்வார் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
மேலும் அவர் எனக்கு அன்பளிப்பாக தந்த ஐபோன், இந்த வழக்கின் போக்கையே மாற்றிவிட்டது. மேலும் இந்த வழக்கு எனக்கு எதிராகவும் திசை திருப்பப்பட்டது, என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சிவசங்கர் கூறிய தகவல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்வப்னா சுரேசும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சிவசங்கருக்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. 3 ஆண்டுகளாக அவர் எனது வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்தார். ஒரு நாள் விட்டு ஒருநாள் என் வீட்டுக்கு வருவார். ஒவ்வொரு மாதமும் பல வெளியூர்களுக்கு ஒன்றாக சென்று வருவோம்.
மாதம் 2 முறையாவது சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு செல்வோம். இருவரும் பல வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளோம். அப்படி இருக்கும்போது அவரை கைக்குள் போட நான் ஏன் ஒரு ஐபோனை கொடுக்க வேண்டும். அவர் கூறியதாலேயே எனக்கு அரசு பணி கிடைத்தது.
சிவசங்கர் மூலம் பல முக்கிய நபர்களின் தொடர்பு கிடைத்தது. கேரள முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனையும் நன்றாக தெரியும். அவரது வீட்டிற்கு நான் பலமுறை சென்றுள்ளேன். அவரும் என் வீட்டிற்கு பலமுறை வந்து சென்றுள்ளார்.
சிவசங்கர் இப்போது என்மீது குற்றம் சுமத்தி தப்பிக்க பார்க்கிறார். நானும் சுயசரிதை எழுதினால், சிவசங்கரின் சுயசரிதையில் இருப்பதை விட பல தகவல்களை தெரிவிக்க முடியும். அப்போது பலரின் முகமூடிகள் கிழியும். பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகும்.