பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை 6.30 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி மும்பை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்
மகாராஷ்டிரா
அரசு நாளை (பிப்ரவரி 7) பொது விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாளை அரை நாள் பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளார்.