கொரோனா
பரவல் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு அதிகரிக்கத் தொடங்கிய போது, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, தொற்று குறைந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், இரண்டாம் அலை படு வேகமாக பரவியது. குறிப்பாக, வட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. இதனால், பள்ளி, கல்லூரிகளை அனைத்து மாநிலங்களும் மூடின.
அதன் தொடர்ச்சியாக, மீண்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது. கொரோனா, ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வந்தது. இதனால், இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது.
அதன்படி, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளை மூடி மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தின. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பள்ளி,
கல்லூரிகள்
மூடப்பட்டன. இந்த நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி (நாளை) முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று குறைந்து வருவதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளையும், அனைத்து கல்லூரிகளையும் நாளை முதல் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தேர்தலை எதிர்கொள்ள உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் காணப்பட்ட கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்து வருகிறது. “ஜனவரி 17ஆம் தேதி 1,01,600 பேர் கொரோனாவுக்கான சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 41,000ஆக குறைந்துள்ளது. இது கூடிய விரைவில் ஜீரோவாக மாறும்.” என்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளதால், பெரும்பாலான மாநிலங்கள் கல்வி நிறுவனங்களை படிப்படியாக திறந்து வருகின்றன. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 3ஆம் தேதி
பள்ளிகள்
திறக்கப்பட்டன. ஒடிசா, தெலங்கானா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றன. பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.