நீட் தேர்விற்கு மூல காரணமாக திமுக இருந்ததை மூடி மறைக்க அதிமுக மீது வீண் பழி சுமத்துவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கைவிட்டு இருப்பதை பார்த்தால், எவ்வளவு பெரிய பொய் ஆனாலும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள் என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் தோன்றுகிறது.
மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடத்தியதாக துரைமுருகன் கூறி இருக்கிறார். யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை. அதே சமயத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்கத் தயங்கமாட்டோம். ‘காரியம் பெரிதா, வீரியம் பெரிதா’ என்று கேட்டால் எங்களைப் பொறுத்தவரை காரியம்தான் பெரிது. அதனால்தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன என என்பதை துரைமுருகன் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டபோது, தி.மு.க என்ன செய்து கொண்டிருந்தது? அதற்குக் பெயர் என்ன? என்பதை துரைமுருகன் அவர்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.
நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்காத நிலையிலும், ஏழை எளிய மாணவர்களுக்கு மாநில அரசால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை வழங்கினோம். இதன் காரணமாக கிட்டத்தட்ட 400 ஏழை எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
செய்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்லத் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு அளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை குறை சொல்வது என்பது சுடும் கண்டனத்திற்குரியது. ‘கருமமே கண்ணாயினார்’ என்பதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்ய முனைப்புடன் நடவடிக்கைஎடுக்குமாறு தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
“ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு, தங்கள் பழவினையால், சமூகநீதி – சமத்துவ விரோத பா.ஜ.க.வுக்குப் பல்லக்குத் தூக்குவதே தலையாய பணியாக இருப்பதைத்தான் அவரது அறிக்கை உணர்த்துகிறது” என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
Also Read: பா.ஜ.க-வினரையும் ஏமாற்றிய பட்ஜெட்!