இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது மறைவு இசை ரசிகர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது. 1929ல் மராத்தி பாடகரும் நாடக நடிகருமான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கருக்கும் குஜராத்தை சேர்ந்த ஷெவந்தி என்பவருக்கும் மகளாக பிறந்தார் லதா மங்கேஷ்கர்.
சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் காட்டி வந்த லதா மங்கேஷ்கர், தமது குரல் வளத்தால் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார்.
13 வயதிலேயே Kiti Hasal என்ற மராத்தி திரைப்படத்திற்கு முதல் பாடலை பாடினார்.
தொடர்ந்து சில திரைப்படங்களுக்கு பாடினாலும், 1949ல் வெளியான Mahal என்ற திரைப்படத்தின் பாடல் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தி திரையுலகின் ஜாம்பவான் இசையமைப்பாளர்களான அனில் பிஸ்வாஸ், சங்கர் ஜெய்கிஷன், நௌஷாத் அலி, எஸ்.டி. பர்மன் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வரையில் சுமார் 20கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் லதா மங்கேஷ்கர் பணியாற்றியுள்ளார்.
மேலும், சில மராத்தி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள லதா மங்கேஷ்கர், இந்தியில் நான்கு திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது.
1955ல் திலீப் குமார் நடிப்பில் உரன் கடோலா என்ற இந்தி திரைப் படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும், லதா மங்கேஷ்கரும், முகமது ரஃபியும் பாடியிருந்தார்கள்.
பின்னர் இந்தப் படம் ‘வான ரதம்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியானது.
இதில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா. பாடலுக்கு இசை நவ்ஷத்.
1956-ம் ஆண்டிற்குப் பிறகு வேறெந்த தமிழ் படங்களிலும் பாடாமல் இருந்த அவரை 1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார் லதா.
பின்பு 1988-ல் ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்து பாடியிருந்தார்.
இந்தப் படத்திற்கும் இளையராஜா தான் இசை. அதன்பிறகு அவர் தமிழில் வேறெந்த பாடல்களையும் பாடவில்லை.
ஆனால், இந்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.