புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021-இன் கீழ் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. இந்தியாவில் செயல்படும் சமூக வலைதளங்கள் இதற்கு உடன்பட, இன்றுடன் (மே 26) கெடு முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வியெழுந்தது.
இந்நிலையில் , பயனர்களின் தனியுரிமையை புதிய விதிமுறைகள் மீறச்சொல்வதாக, ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. பயனர் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் எங்கிருந்து யாருக்கு அனுப்பப்படுகிறது என்பதை புதிய விதிகள் கண்காணிகச் சொல்வதால், இது தனியுரிமை மீறலாகும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசியிருக்கும் வாட்ஸ் அப் செய்தித் தொடர்பாளர், “பயனர்களின் உரையாடலைக் கண்காணிப்பது என்பது வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்தியிலும் எங்களது விரல் ரேகையை வைப்பதற்குச் சமம். பயனர்கள் அனுப்பும் செய்திக்கான பாதுகாப்பை இது உடைக்கும். அடிப்படையில் மக்களின் அந்தரங்கத்துக்கான உரிமையை மீறும் செயலாகும். எங்கள் பயனர்களின் தனியுரிமைக்கு எதிரான விஷயங்களை எங்கிருந்தாலும் அதை நாங்கள் எதிர்த்திருக்கிறோம்.
அதே நேரம் இந்திய அரசுடன் சேர்ந்து, மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தத் தேவையான நடைமுறைத் தீர்வுகள் என்ன என்பதையும் நாங்கள் பார்ப்போம். எங்களுக்குக் கிடைக்கும் தகவலைப் பற்றிய விபரங்கள் சட்ட ரீதியாகக் கோரப்பட்டால் தருவோம்” என்று கூறியுள்ளார்.
இன்னும் இந்திய அரசாங்கம் இந்த வழக்கில் பதிலளிக்கவில்லை.