தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1, 2-ம் நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 21-வதுமெகா கரோனா தடுப்பூசி முகாம்கள்நேற்று நடைபெற்றன. சென்னைஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் இதுவரை 9.60 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 90.48 சதவீதம் பேர் முதல் தவணை, 69.33 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு முதல்வர் வலியுறுத்தி வருகிறார். 10 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கோபால்ட், லினாக் போன்ற அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1, 2-ம் நிலைகளில்உள்ளவர்களைக் கண்டறிந்தால்,அவர்களது உயிரைக் காப்பாற்றிவிடலாம். எனவே, தமிழகத்தில் 1, 2-ம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும்.
தமிழகத்தில் புற்றுநோய் மருத்துவமனைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி,மதுரை, நாகர்கோவில் மாவட்டங்களில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2021 டிச. 18-ல் தொடங்கப்பட்ட ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின்கீழ் விபத்தில் பாதிக்கப்பட்ட 13,636 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.12.94 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2021 ஆக.5-ம் தேதிதொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடிமருத்துவம்’ திட்டத்தில் இதுவரை 48 லட்சத்து 30,341 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுகவினர் புறக்கணித்துள்ளதைப்போல, மக்களும் அவர்களைப் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.