ரயில்வே பணிகளில் சேர விரும்புவர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி, பணம் கொடுத்து ஏமாந்து போவதான செய்திகள், ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளன. ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வ ரயில்வேபணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு முகமை (ஆர்ஆர்சி) ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ரயில்வே துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்ய எம்பிளாய்மெண்ட் நியூஸ், ரோஜ்கார் சமாச்சார் போன்ற அரசு வெளியீடுகளிலும், பிரபல தேசிய, உள்ளூர் நாளிதழ்களில் இணையதள விவரங்களுடனும் அதிகாரப்பூர்வ ரயில்வே இணையதளங்களிலும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணையதளம் வாயிலாக அனுப்பலாம்.
ரயில்வே போட்டித் தேர்வுகள்முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையிலேயே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
எனவே ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். விண்ணப்பதாரர்கள்குறுக்கு வழியில் பணியில் சேர்ந்தது தெரிய வந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.