இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் (92). இவரது சகோதரி ஆஷா போஸ்லேவும் புகழ்பெற்ற பின்னணி பாடகர். பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற லதா மங்கேஷ்கர் கடந்த மாதம் 11ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலையில் உடனடியாக முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் அவர் செயற்கை சுவாசத்தில் இருந்துவிடுவிக்கப்பட்டதோடு கொரோனாவில் இருந்தும் குணமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயும் லதா மங்கேஷ்கர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். லதா மங்கேஷ்கரின் உறவினர் ரச்சனாவும் இதனை உறுதிபடுத்தி இருந்தார். ஆனாலும் தொடர்ந்து லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துவிட்டார்.