மும்பை,-கொரோனா பாதிப்பால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இதனால் ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில், ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஓரளவு குணமடைந்தார். இதையடுத்து, வென்டிலேட்டர் அகற்றப்பட்டாலும், தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்து வந்தார்.இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் நேற்று கூறினர். இதனால், மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது.தன் 13 வயதில் பாடத் துவங்கிய லதா மங்கேஷ்கர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 30 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக பாடியுள்ளார். இந்தியாவின் ‘மெலடி குயின்’ என அழைக்கப்படும் அவர், நாட்டின் உயரிய பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.
Advertisement