லதா மங்கேஷ்கர் மறைவு; தலைவர்கள் இரங்கல்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள், ஈடு இணையற்றதாகவே இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி
லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனித்தார். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். அவர் எப்போதும் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பினார். அவரிடம் நான் அளவற்ற அன்பை பெற்றிருப்பதை பெருமையாக கருதுகிறேன். லதா மங்கேஷ்கரின் மறைவால், வாடும் ஒவ்வொரு இந்தியர்களுடன் சேர்ந்து நானும் துக்கப்படுகிறேன். அவரது குடும்பத்தினருடன் பேசி இரங்கலை தெரிவித்துள்ளேன். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவர் விட்டு சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும் குரல் நிலைத்து நிற்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
இசை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
லதா மங்கேஷ்கரின் மறைவு நாட்டிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு. அவரது இசை பல தலைமுறைகள் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி கொள்கிறேன்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல்
லதா மங்கேஷ்கர் மறைவு என்ற சோகமான செய்தியை கேட்டேன். இன்னும் பல தசாப்தங்களுக்கு இந்தியாவிற்கு நெருங்கிய குரலாக அவர் நீடிப்பார். அவரது தங்கக்குரல் அழியாதது. அவரது ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
பா.ஜ., தலைவர் நட்டா
ஒவ்வொரு இசை ரசிகர்களின் மனதில் வாழும் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவால் மனம் உடைந்து போனது.
மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மறைவு செய்தி கேட்டு மனம் உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் மறைவு செய்தி கேட்டு மனம் வேதனை அடைந்தது. எட்டு தசாப்தங்களாக, இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் மனதை தொட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.