மும்பை, பிப். 7-‘இசைக்குயில், இந்தியாவின் நைட்டிங்கேல்’ என, வர்ணிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, உடல் நலக்குறைவால் மும்பையில் நேற்று காலமானார். மும்பையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது மறைவையொட்டி இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும், நாடு முழுதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. லதா மங்கேஷ்கர் உடலுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ‘இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம் உட்பட 36 இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதா சாஹிப் பால்கே விருது பெற்றதுடன், பலமுறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.
கடந்த மாதம் 8ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ‘பிரீச் கேண்டி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘நிமோனியா’ தொற்று கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் ‘வென்டி லேட்டர்’ எனப்படும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் உடல்நலம் தேறியதை அடுத்து வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் தெரிவித்தார்.
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில், நேற்று முன்தினம் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் உறுப்புகளும் செயல் இழந்த நிலையில் நேற்று காலை 8:12 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை ‘ப்ரீச் கேண்டி’ மருத்துவமனையின் டாக்டர் பிரதித் சாம்தானி உறுதி செய்தார். இதையடுத்து லதா மங்கேஷ்கரின் உடல், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பெடார் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த இசைக்குயிலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, அவரது வீட்டின் முன் திரண்டனர்.
இதையடுத்து அவரது வீடு அமைந்துள்ள பகுதி முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்களை, அவரது வீட்டின் முன் நின்று உரக்க பாடியபடி ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கவும், நாடு முழுதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும், பொது விடுமுறையும் அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தேசியக்கொடி போர்த்தப்பட்ட லதா மங்கேஷ்கரின் உடல், அவரது வீட்டில் இருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
ராணுவம் மற்றும் போலீசார் அணிவகுத்து செல்ல, ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. லதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த வாகனத்தில் அவரது சகோதரியும், பாடகியுமான ஆஷா போஸ்லே, சகோதரிகள் மீனா, உஷா மற்றும் சகோதரர் ஹ்ருதயநாத் உள்ளிட்டோர் அமர்ந்து சென்றனர். மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரே ஊர்வலத்தில் பங்கேற்றார்.வீட்டில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம், 10 கி.மீ., பயணித்து தாதரில் உள்ள சிவாஜி பூங்காவை அடைந்தது. லதா மங்கேஷ்கரின் உடலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின், லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல் கூறினார்.
மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகர்கள் அமிதாப், ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின், லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடந்தது. லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹ்ருதயநாத், சிதைக்கு தீ மூட்டினார். லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாக்., பிரதமர் இம்ரான் கான், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துஉள்ளனர்.