வீரமே வாகை சூடும்
ஆறடி சூறாவளியாக சுழன்று சண்டையில் மிரட்டுவதும், 'சாக்லேட் பாயாக' காதலில் கலக்குவதும், பாசக்காரனாக சென்டிமென்ட்டில் உருகுவதும்… என படத்திற்கு படம் அவதாரம் எடுக்கும் விஷால் ஆக்ரோஷத்துடன் 'வீரமே வாகை சூடும்' என திரையை தெறிக்கவிட வருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்…
* 'வீரமே வாகை சூடும்' என்ன கதை
தான் உண்டு தன் வேலை உண்டு என வாழும் மிடில்கிளாஸ் பையன் பற்றிய கதை. சாமானியன் ஜெயிக்க வேண்டும் என சொல்லும் படம். 'பாண்டிய நாடு' விஷாலை படத்தில் பார்க்கலாம். அப்பா ஏட்டு, எனக்கு போலீஸ் பயிற்சி முடித்து வேலைக்காக காத்திருக்கும் கேரக்டர். அம்மாவாக துளசி, அப்பாவாக மாரிமுத்து, ஜோடியா டிம்பிள் ஹையாத்தி, தங்கையாக ரவீணா, யோகி பாபு உடன் பாபு ராஜ் என்ற புது வில்லனை கேரளாவில் இருந்து தமிழுக்கு கொண்டு வந்திருக்கோம்.
* குறும்படம் பார்த்து பெரும் படத்திற்கு வாய்ப்பு
சரவணன் இயக்கிய குறும்படம் நிறைய விருதுகள் வாங்கி இருக்கு, அதை பார்த்து, அவரிடம் ஒரு கதை கேட்டேன். அவர் கொண்டு வந்த கதை தான் 'வீரமே வாகை சூடும்'. திரைக்கதை நல்லா எழுதியிருக்கிறார். ஹீரோ, வில்லன் சந்திக்கும் கிளைமாக்ஸ் சூப்பராக இருக்கும்.
* இந்த கதையில் சமூகம் சார்ந்த விஷயங்கள்
3 கதைகள் வெவ்வேறு வீட்டில் நடக்கும். ஒரே படத்தில் 3 கதை எப்படி ஒன்று சேரும் என எதிர்பார்க்க வைக்கும். துாத்துக்குடி ஸ்டெர்லைட் விஷயங்களையும் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.
* புது இயக்குனர்களை நம்பி கோடிக்கணக்கில்
ரிஸ்க் தான்… புது பசங்க வெறியோட இருக்காங்க. புது இயக்குனர்களுக்கு ஜெயிக்க வேண்டும் என்று தான் வாய்ப்புகள் தருகிறேன். அவர்கள் மூளையை நான் பயன்படுத்துகிறேன், இது ஒரு சுயநலம்தான். இது மட்டுமல்ல அடுத்து 'லத்தி' படமும் புது இயக்குனர் தான், நல்ல கதையானு தான் பார்ப்பேன்.
* உங்களுடைய 'துப்பறிவாளன் 2' படம்
18 ஆண்டுகளுக்கு பின் என் கனவு நிஜமாக போகிறது. இந்த படம் நானே இயக்குகிறேன், இயக்குனர் மிஷ்கின் பின் வாங்கின பின் இந்த படத்தை நான் தத்து எடுத்த மாதிரி ஆயிடுச்சு. அவ்ளோ கோடிகள் செலவு பண்ணியிருக்கேன். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஆரம்பிக்கிறேன்.
* விஷால் கல்யாணம் எப்போது நடக்கும்
இதை நான் முடிவு பண்ண முடியாது… மேலே இருக்கறவர் தான் முடிவு பண்ணனும். நடக்கும் போது நடக்கட்டும். நடிகர் சங்க கட்டடம் பாதி துருப்பிடிச்சு கிடக்குது. விரைவில் எங்கள் பக்கம் சாதகமா எல்லாம் முடியும்னு நம்புறேன்.
* உங்க அப்பா உங்க கூட நடிக்கணும்னு ஆசை
எனக்கு தெரிஞ்சி ஆபாவாணன் 'இணைந்த கைகள்' ரீமேக் பண்ணனும்னு நினைக்கிறேன், அவருக்கு 83 வயசு. இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கார், அவருக்கு நடிக்க ரொம்ப ஆசை தான். நல்ல வாய்ப்பு வரும் போது சேர்ந்து நடிக்கலாம்
* நடிகர்கள் நிறைய பேரு படம் தயாரித்து கடன்..
சினிமா மோசமான நிலையில் இருக்கு, பொங்கலுக்கு பல படங்களுக்குஷோ கேன்சல் ஆயிடுச்சு. நானே ஹீரோ, தயாரிப்பாளர் என்பதால் சலுகை இருக்கு, அந்த சலுகை எல்லா தயாரிப்பாளருக்கும் இருக்காது. சலுகைகள் கிடைத்தால் தான் சினிமா பண்ண முடியும்.
* உங்க அரசியல் ஆர்வம் தற்போதைய நிலவரம்
சென்னை ஆர்.கே.நகரில் மனு தாக்கல் செய்த போது 'இது ஸ்கூல், காலேஜ் தேர்தல் இல்லடா ஆர்.கே.நகர்'னு நண்பர்கள் கூறினர். அம்மா அதற்கான தொகை பத்தாயிரம் கொடுத்தாங்க. எதையும் திட்டமிட மாட்டேன் மனதில் பட்டதை செய்வேன். வரப்போற படம் பாருங்க என்னை தெரிஞ்சுக்கலாம்.