ஹிஜாப் தடை: ஆதரிக்கும் இஸ்லாமியர்கள்!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகள் சிலவற்றில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் (தலை மறைப்பு துணி) அணிய தடை விதிக்கப்பட்டது. அப்படி அணிந்த மாணவிகளை பள்ளிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை.

இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், “அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் துண்டு அணிந்து வருவோம்” என்று இந்து மாணவிகள் சிலர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இந்த ஹிஜாப் தடையை பாஜக உள்ளிட்ட இந்துத்து அமைப்புகள் ஆதரிக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. காங்கிரஸுடன் இணைந்து, பகுத்தறிவாளர்களும் நாத்திகர்களாகத் தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்களும் எதிர்க்கிறார்கள்.

கவனிக்கப்படாத மூன்றாவது குரல்

மூன்றாவது தரப்பு ஒன்று தெளிவாக ஆனால், மெல்லிய குரலில் ஒலிக்கிறது. இந்தக் குரல், இஸ்லாமிய மதத்திலிருந்தே எழுந்தாலும் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை.

“இஸ்லாமியக் கடும்போக்குவாதிகளின் மிரட்டல்களைத் தவிர்க்கப் பெயர் குறிப்பிடுவதைத் தவிர்க்கும் முஸ்லிம் பகுத்தறிவாளர்” என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர் தனது கருத்தைச் சொல்கிறார். இவர், “பிற மதத்தவர் பொட்டு வைத்து கல்வி நிலையங்களுக்கு வருகிறார்களே, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் என்ன என்கிறார்கள் சிலர். முகத்தையும் உடலையும் முழுவதுமாக மறைக்கும் ஹிஜாபை, சிறிய அளவில் நெற்றியில் இடும் திருநீரோடும் ருத்ராட்சத்தோடும் மணிக்கட்டில் கட்டும் கயிரோடும் ஒப்பிட முடியாது.

ஹிஜாப் தடை

ஹிஜாப் என்பது சீருடையை முற்றிலும் தவிர்த்துவிட்டு அல்லது மறைக்கும்படி அணியும் மேலங்கி. சீக்கிய டர்பன், திருநீறு, இசுலாமிய குல்லா இதெல்லாம் சீருடைக்கு மேலதிகமாக அணிவது. இந்த அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் (அல்லது இருந்தும் வீம்புகென்றே) சீருடையை புறக்கணிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவது தவறு” என்கிறார் இவர்.

திருநீறோடு ஒப்பிட வேண்டுமானால், முஸ்லிம்களுக்கு சுன்னாவான (உவகையானது) சுர்மா எனும் ஒருவகை கண் மை, அத்தர் எனும் வாசனைத்திரவியம், தாயத்து போன்றவற்றைக் கொள்ளலாம். இவற்றுக்குத் தடை இல்லையே என்பவர், “குறைந்தபட்ச அடையாளத்தைக்கூட மறைக்கும் எந்த உடையோ, கோலமோ நாகரீகச் சமூகத்தில் பொது வெளியில் தடை செய்யப்பட வேண்டியவை. அதில் புழங்குவதற்கு அவர்களுக்கு குறிப்பிட்ட தனி இடங்களை வகுக்கலாம்” என்கிறார்.

வெளியில் துருத்திக்கொண்டு இருக்கும் சாதி, மத அடையாளங்களை முற்றிலுமாக பள்ளிகளில், அரசு பரிபாலனம் நடக்கும் இடங்களில் தடை செய்ய வேண்டும் என்று இவர் அலோசனை கூறுகிறார்.

அடிமைப்படுத்தும் உடை

இதே கருத்தை வெளிப்படுத்துகிறார் ஜின்னா மாச்சு. இவர் தன்னை, எக்ஸ் முஸ்லிம் (முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியேறியவர்) என அறிவித்துக்கொள்கிறார். மேலும், “எனக்கு எம்மதமும் சம்மதமில்லை” என்று அறிவித்துள்ளார்.

ஜின்னா

இவர், “கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தின் வலையஞ்சிரங்காராவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு ஒரு நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அது, பாலின பாகுபாட்டை அகற்றும் வகையில் ஆண், பெண் இருபாலின மாணவர்களும் ஒரே சீருடை அணிய வேண்டும் என்பது. கடந்த டிசம்பர் மாதம் முதல், கோழிக்கோடு மாவட்டத்தில் பாலுசேரியில் அரசு உயர்நிலை பள்ளியில் இதே நடைமுறை அமலானது. இதெல்லாம் ஊடகங்களில் பெரிய செய்திகளாக வந்தன. ஆனால் அப்போதெல்லாம் எதிர்ப்பு வரவில்லை. கர்நாடக பள்ளிகளில் மட்டுமல்ல.. அனைத்து பள்ளி, கல்லூரிகளிலுமே புர்கா உள்ளிட்ட எந்த மத அடையாள உடையையும் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.

மேலும், “இஸ்லாமிய தலைமை பீடமாக கருதப்படும் சவுதி அரேபியாவில் இந்த புர்கா, ஹிஜாப் எல்லாம் கட்டாயம் அல்ல என்று சொல்லிவிட்டார்கள். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய நாடுகள் சிலவும் இவற்றுக்குத் தடை விதித்துள்ளன. ஆகவே, பெண்களை அடிமைப்படுத்தும், இந்த முறையைத் தவிர்ப்பதே இஸ்லாமிய பெண்களின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்” என்கிறார் ஜின்னா மாச்சு.

எழுத்தாளர் எச்.பீர்முகமதுவும் இதே கருத்தை கொண்டிருக்கிறார். இவர், “முஸ்லிம் மாணவிகளுக்கு பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தாலும் சீருடை. வெளியே சென்றாலும் சீருடை. (புர்கா). ஆக எப்போதும் சீருடைதான்!” என்கிறார்.

எழுத்தாளர் எச்.பீர்முகமது

மேலும், “இந்தியாவை பொறுத்தவரை பள்ளிகளில் சீருடை என்பது எல்லோருக்கும் பொதுவானது மட்டுமல்ல; அது மதச்சார்பற்ற கல்விமுறையின் அடிப்படையும்கூட. இங்கே எவ்வித மத/சாதிய அடையாளங்களுக்கும் இடமில்லை. இந்நிலையில் ஆரம்ப பள்ளி பெண் குழந்தைகள் முதல் மேல்நிலை பள்ளி மாணவிகள் வரை பர்தாவுடன் முகமூடி அணிவித்து பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக பல இந்திய மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது. அதுவும் குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு மாஸ்க் அணிவது என்ற சாக்கில் முல்லாக்களால்
முஸ்லிம் பெண்கள்
மீது முகமூடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தத் தொற்றுவியாதி அதற்குரிய வேகத்துடன் பரவி வருகிறது. பெண்களை குறிவைத்து பரவும் இந்த முகமூடி நோய்க்கு தமிழ் அறிவுத்தளத்தில் சரியான எதிர்வினை இல்லாததே காரணம்.

காவித்துண்டுடன் மாணவர்கள்

பேச வேண்டிய. முஸ்லிம் எழுத்தாளர்களும்கூட இந்த விஷயத்தில் பிழைப்புவாதிகளாக இருக்கிறார்கள்” என்கிறார் பீர் முகமது.

“இந்துத்துவம் உள்ளிட்ட எந்தவொரு மத அடிப்படைவாதத்தையும் எதிர்க்கிறோம். அதே நேரம் இந்துத்துவதிகளின் வற்புறுத்தலால்
ஹிஜாப் தடை
கொண்டுவரப்பட்டது என்பதற்காக அதை எதிர்க்க வேண்டியதில்லை” என்பதையும் பீர் முகம்மதுவும் ஜின்னாவும் தெளிவுபடுத்துகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.