இந்தியா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கு இந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்று ஒரு நாள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம், அகமதாபாதில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா.
இதையடுத்து, மே.இ.தீவுகள் பேட்டிங் செய்யத் தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் மே.இ.தீவுகள் அணி திணறியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மே.இ.தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், சிராஜ் வீசிய மூன்றாவது ஓவரில் போல்டு ஆனார்.
இதையடுத்து பிரான்டம் கிங்டமை பெவிலியனுக்கு அனுப்பினார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர். அடுத்தடுத்து களமிறங்கிய டாரன் பிராவோ (18 ரன்கள்), நிகோலஸ் பூரன் (18 ரன்கள்) ஆட்டமிழந்தனர். கேப்டன் பொல்லார்டு, சாஹலின் சுழலில் முதல் பந்திலேயே போல்டு ஆனார்.
மே.இ. திவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 43.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 176 ரன்னுக்கு சுருண்டது. இதனால், 177 ரன் எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
சாஹல் சாதனை: பூரன் விக்கெட்டை சாஹல் வீழ்த்தியபோது அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.
இந்திய அணிக்கு இது 1000-ஆவது ஒரு நாள் ஆட்டமாகும். சொந்த மண்ணில் வேறு விளையாடுவதால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர்.