புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பேரணிகள், வாகனப் பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். ஆனால் அதே வேளையில் உள் அரங்கு, வெளியிடங்களில் அரசியல் கூட்டங்களுக்கு சில தளர்வுகள் உண்டு என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7-ம் தேதி வரை நடக்கிறது. 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இந்நிலையில் 5 மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பிரச்சாரங்கள் நடத்த அனுமதிப்பதா அல்லது தடையை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் பரிசீலித்தது.
ஏற்கெனவே அரசியல் கட்சிகளுக்கு 16 அம்சங்கள் கொண்ட வழிகாட்டி நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், சிறிய கூட்டங்கள் நடத்தக்கூடாது, வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்ய சிலர் மட்டுமே வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வேண்டும், வெற்றிக் கொண்டாட்டம் கூடாது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள ஒமைக்ரான் மூன்றாவது அலையைக் கருத்தில் கொண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பேரணிகள், வாகனப் பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சருடன் தேர்தல் குழுவானது கடந்த சனிக்கிழமையன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
அது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உள் அரங்குகள் மற்றும் பொதுவெளியில் நடத்தப்படும் அரசியல் கூட்டங்களில் சில தள்ர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. உள் அரங்கு என்றால் அதன் கொள்ளளவில் 50% ஆட்களுடனும், பொதுவெளி என்றால் அதன் கொள்ளளவில் 30% ஆட்களுடனும் பிரச்சாரங்கள் நடத்தப்படலாம். அதேவேளையில் ஒட்டி பேரணிகள், வாகனப் பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.