19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. இதில் இந்தியா வென்று 5வது முறையாக U19 உலகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ராஜ் பவா எனும் வேகப்பந்து வீச்சாளர் 5 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் இந்தியாவின் கையை ஓங்க செய்துள்ளார். இவர்தான் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனும் கூட! இந்த ராஜ் பவா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…
19 வயதாகும் ராஜ் பவா ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இந்தத் தொடர் முழுவதுமே மிகச்சிறப்பாக ஆடி வந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணியின் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அயர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் 42 ரன்களை எடுத்திருந்தார்.
உகாண்டாவிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் உச்சக்கட்டமாக 108 பந்துகளில் 102 ரன்களை அடித்திருந்தார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே.
காலிறுதியிலும் அரையிறுதியிலும் கொஞ்சம் சைலண்ட்டாக இருந்தவர், இறுதிப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி 5 விக்கெட் ஹால் எடுத்திருக்கிறார். தனது கட்டுக்கோப்பான ஸ்பெல்களால் இங்கிலாந்தை எழவே முடியாமல் சரித்திருக்கிறார். இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் அத்தனையின் மீதும் ராஜ் பவாவின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சேஸிங்கில், மிடில் ஆர்டரில் களமிறங்கி, 35 ரன்களும் அடித்துள்ளார்.
இமாச்சல் பிரதேசத்தில் பிறந்த ராஜ் பவாவின் தந்தை சுக்விந்தர் சிங் பவா இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் பயிற்சியாளர் ஆவார்.
இப்போது U19 அணியில் ராஜ் பவாவின் ஜெர்சி எண் 12. ராஜ் பவாவுமே யுவராஜ் சிங்கின் ரசிகரே.
சிறுவயதில் தங்களுடைய பயிற்சி மையத்தில் யுவராஜ் பயிற்சி செய்வதை பார்த்தே ராஜ் பவா வளர்ந்திருக்கிறார். ராஜ் பவாவுமே ஒரு இடக்கை பேட்ஸ்மேன் தான். தன்னையறியாமலேயே தன்னுடைய பேட்டிங்கில் யுவராஜின் தாக்கம் இருப்பதாக ராஜ் பவாவே கூறியிருக்கிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக வேகப்பந்து வீச்சிலிருந்து ஸ்பின்னராக மாறிய ராஜ் பவா, சில ஆண்டுகளிலேயே மீண்டும் வேகப்பந்து வீச்சுக்கே திரும்பிவிட்டார். இப்போது இந்திய U19 அணியின் தவிர்க்க முடியாத வீரராக மறக்க முடியாத பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்து வருகிறார்.
ராஜ் பவாவின் தாத்தா தர்லோச்சன் பவாவும் ஒரு விளையாட்டு வீரரே. 1948 லண்டன் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்தவர் அவர்.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா அடித்த நான்கு கோல்களில் ராஜ் பவாவின் தாத்தா அடித்த ஒரு கோலும் அடக்கம். தாத்தாவின் கடந்தகால சகாப்தத்தை கேட்டும்… யுவராஜ் எனும் நிகழ்கால மாவீரனை அருகிலிருந்து பார்த்தும் வளர்ந்தவர், இப்போது தனக்கான சாம்ராஜ்யத்தை இங்கிலாந்துக்கெதிரான 5 விக்கெட் ஹால் மூலம் கட்டியெழுப்பத் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள் ராஜ் பவா!