Chennai Metro : இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நான்கு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் போது காரிடர் 4 மற்றும் 5-ல் ஒரே நேரத்தில், ஒன்றன் மீது ஒன்றாக, இரண்டு ரயில்கள் 5 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், காரம்பாக்கம், போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வடசென்னை அல்லது தென் சென்னைக்கு எளிதாக பயணிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துவங்கியுள்ள நிலையில் மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) ஆகிய மூன்று வழித்தடங்கள் மாநில, மத்திய அரசு நிதிகள் மற்றும் சர்வதேச வங்கிகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ. 61,843 கோடி செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய விரிவான திட்டத்தின் கீழ், பயணிகள் தங்களின் ரயில்களை தவறவிடாமல் இருக்கும் வகையில் ரயில் நிலையங்கள் நன்றாக திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் 3 மற்றும் 5ம் வழித்தடங்கள் சோழிங்கநல்லூர், மாதாவரம் மற்றும் திருமயிலையில் சந்திக்கின்றன. ஆனால் வழித்தடம் நான்கு மற்றும் ஐந்து மேலும் கீழுமாக அமைக்கப்படுவதால் இந்த இரண்டு வழித்தடங்களும் நான்கு நிறுத்தங்களை கொண்டுள்ளது.
இந்த இரட்டைப் பாதை நான்கு நிலையங்களில் இரண்டு கட்டங்களாக கட்டப்படும். ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் ஆலம்பாக்கம் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் வருகின்றன. வழித்தடம் நான்கு, நிலப்பரப்பில் இருந்ந்து 13.5 மீட்டர் உயரத்தில் கட்டி எழுப்பப்படும். அதே போன்று வழித்தடம் 5, 21 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் என்று சென்னை மெட்ரோ லிமிட்டட் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சில மாதங்களாக பணிகள் நடந்து வரும் நிலையில், மண் பரிசோதனைக்கு பின், தூண்களை உயர்த்தும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டைப் பாதைகளும் 5 கி.மீ தூரத்திற்கு பகிரப்பட்ட தூண்களுக்கு மத்தியில் கட்டப்படும். டிக்கெட் ஒரே இடத்தில் வழங்கப்பட்டாலும் ரயில்களுக்கு தனித்தனி ப்ளாட்ஃபார்கள் இருக்கும்.
இந்த திட்டத்தினால் போரூரை சேர்ந்த எந்த ஒரு நபரும் அடையாறு, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தரமணி, மாதாவரம், ரெட்டேரி, கோயம்பேடு போன்ற பகுதிகளை விரைவாக அடையலாம்.