“திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – இது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கருத்து. இவர் மட்டுமல்ல பல்வேறு கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் மத்திய அரசு, திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2017-ல், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-ன்படி 18 வயது பூர்த்தியடைந்துள்ள மனைவியுடன் கட்டாயமாக பாலுறவு கொள்ளும் கணவன் மீது வல்லுறவு குற்றத்தை சுமத்த முடியாது என்ற விலக்கை நீக்க அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், மனைவியை கணவன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது கிரிமினல் குற்றம் ஆகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்வதால், திருமணம் என்ற சமூகக் கட்டமைப்பே கேள்விக்குறியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், “திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் தொடர்பாக அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. எல்லா திருமணங்களையும் வன்முறையானதாகக் கருத முடியாது. எல்லா கணவர்களையும் ரேப்பிஸ்ட் என்று சொல்லிவிட முடியாது” என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
திருமண உறவிலும் பாலியல் வல்லுறவு நடக்கலாம் என்று மற்ற அமைப்புகள் கூறுவதை ஏற்றுக் கொள்வதில் அரசு சற்று எச்சரிக்கையுடனேயே இருக்கிறது என்றே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
2016-ல் திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்க முடியாது என்பதற்கு அரசு கூறிய காரணத்தைக் கவனிக்க வேண்டும். இந்திய சமூகத்தில் கல்வி, வறுமை, பல்வேறு சமூகப் பழக்கவழக்கங்கள், நன்மதிப்புகள், மத நம்பிக்கைகள் ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டே இதில் முடிவெடுக்க முடியும். இந்தியச் சமூகம் திருமணத்தை புனிதமாகக் கருதுகிறது என்று கூறியிருந்தது.
இனியும் தாமதிக்கலாமா?
நம் நாட்டில் குடும்ப வன்முறைக்கு எதிராக சட்டம் உள்ளது. அதில் உடல் ரீதியாக, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு தண்டனை உள்ளது. இந்த சட்டங்களால் திருமணம் எனும் சமூக கட்டமைப்பிற்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டுவிடவில்லை. அதேபோல் திருமண உறவில் பாலியல் வல்லுறவையும் கிரிமினல் குற்றமாக்குவதால் திருமணம் எனும் அமைப்பு சிதைந்துவிடாது. ஆகையால், இனியும் தாமதிக்காமல் சட்டங்களை இயற்ற வேண்டும். மனைவி என்பவர் கணவரின் சொத்து என்ற மனப்பாங்கில் அணுகும் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். திருமண உறவை பழமைவாத கண்ணாடியின் ஊடே பார்க்கக் கூடாது. கணவரின் ஆதிக்கத்தின்படி நடந்து கொள்ள வேண்டியவர் அல்ல மனைவி. மனைவிக்கும் ஒரு சுயம் இருக்கிறது என்பதை உணர வேண்டிய தருணம் இது.
இங்கே மீண்டும் ராகுல் காந்தி கூறிய, “திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்ற வார்த்தைகள் நினைவுகூரத்தக்கது.