உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் 2 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுக்க மறுத்த
பாஜக
தலைமை அவர்களுக்குப் பதில் அவர்களது கணவர்களுக்கு டிக்கெட் கொடுத்துள்ளது.
நேற்று மாலை பாஜகவின் 9வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் முக்கிய வேட்பாளராக உ.பி. பாஜக மாநிலத் துணைத் தலைவர் தயா சங்கர் சிங் இடம் பெற்றுள்ளார். இவரை பல்லியா தொகுதியில் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. தயா சங்கர் சிங்கின் மனைவியான ஸ்வாதி சிங் கேபினட் அமைச்சராகவும் இருக்கிறார். அவர் கடந்த தேர்தலில் லக்னோவில் போட்டியிட்டிருந்தார். அவருக்கு பாஜக இந்த முறை சீட் தரவில்லை. அதற்குப் பதில் ஸ்வாதியின் கணவருக்கு சீட் கொடுத்துள்ளது.
அதேபோல
அமேதி
தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவான கரீமா சிங்குக்கு டிக்கெட் தரப்படவில்லை. அதற்குப் பதில் அவரது கணவரான சஞ்சய் சிங்குக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது. சஞ்சய் சிங்கின் முதல் மனைவிதான் கரீமா என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விசேஷம் என்னவென்றால் கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் இத்தொகுதியில் கரீமா சிங்கும், சஞ்சய் சிங்கின் 2வது மனைவியான அமிதா சிங்கும் நேருக்கு நேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக கிழக்கு உ.பியில் மட்டும் 15 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுத்துள்ளது பாஜக. இங்கு 6 மற்றும் 7வது கட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 9வது வேட்பாளர் பட்டியில் 7 பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல இந்தப் பட்டியலிலும் ஓபிசிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதாவது 14 ஓபிசி வேட்பாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். 9 தலித்துகள், 9 தாக்கூர்கள், எட்டு பிராமணர்களுக்கும் சீட் கிடைத்துள்ளது.