உத்தரப் பிரதேசத்தில்
பாஜக
கூட்டணி வைத்துள்ள அப்னா தளம் (எஸ்) கட்சி, தனக்கும், பாஜகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் இருப்பதாக அறிவித்துள்ளது. அத்தோடு உ.பி. சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளரையும் அது அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீது அதிருப்தி அதிகரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதனால் அமித் ஷா கவலை அடைந்துள்ளதாகவும், உ.பி. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வேகத்தில் அவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மற்ற வேலைகளைக் கூட பாஜக தலைமை ஒத்தி வைத்து விட்டு, மொத்த கவனத்தையும் உ.பி. பக்கம் திருப்பியுள்ளது.
இந்த நிலையில் உ.பியில் பாஜகவின் கூட்டாளியான அப்னா தளம் (எஸ்) ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது. அக்கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான
அனுப்பிரியா படேல்
கூறுகையில், பாஜகவின் இந்துத்வா மற்றும் பிற கொள்கைகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் பாஜகவிடமிருந்து வேறுபட்டவர்கள்.. சமூக நீதிக்காக எங்களது கட்சி போராடி வருகிறது. முஸ்லீம் வேட்பாளர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்று கூறியுள்ளார் அனுப்பிரியா படேல்.
மேலும் அவர் கூறுகையில், இந்துத்வா குறித்தும், பாஜக குறித்தும் என்னிடம் பலர் தொடர்ந்து கேட்கிறார்கள். அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. நான் அதிலிருந்து விலகியே நிற்கிறேன். எனது கட்சி மதவாத கட்சி அல்ல, மத அரசியல் செய்யும் கட்சி அல்ல. நாங்கள் சமூக நீதிக்காக போராடும் கட்சி. அதுதான் எங்களது கொள்கை என்றார் அவர்.
கடந்த 3 தேர்தல்களாக பாஜகவுடன் இணைந்துதான் அப்னா தளம் (எஸ்) கட்சி போட்டியிட்டு வருகிறது. 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்கள் மற்றும் 2017 சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன. இந்த தேர்தல்களில் முஸ்லீம்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை அப்னா தளம் (எஸ்). ஆனால் இந்தத் தேர்தலில் முதல் முறையாக முஸ்லீம் ஒருவருக்கு வாய்ப்பளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழம்பெரும் தலைவரான பேகம் நூர் பானுவின் பேரன் ஹைதர் அலிக்கு அப்னா தளம் (எஸ்) கட்சி சீட் கொடுத்துள்ளது. மூத்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஆஸம் கானின் மகன் அப்துல்லா ஆஸம் கானுக்கு எதிராக சுவார் தொகுதியில் ஹைதர் அலி நிறுத்தப்படுகிறார்.
என்ன விசேஷம் என்றால் அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு மட்டுமல்ல தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே ஒரே முஸ்லீம் வேட்பாளர் இந்த ஹைதர் அலிதான். பாஜகவில் முஸ்லீம்களுக்கு சீட் தரப்படவில்லை.
அப்னா தளம் (எஸ்) கட்சி இதுவரை 13 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும் 5 இடங்களுக்கு அது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி 11 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை வென்றது. லோக்சபாவில் இக்கட்சிக்கு 2 எம்.பிக்களும் உள்ளனர்.