அமிதாப்பச்சன் நடிக்கும் தமிழ் படம் : மீண்டும் தொடங்குகிறது
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. பாலிவுட்டின் பிரபல ஸ்டார் அமிதாப்பச்சன் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார் என்பதுதான் அது. அந்த படத்தில் அமிதாப் தந்தையாகவும், எஸ்.ஜே.சூர்யா அவரது மகனாக நடிக்கிறார் என்ற அறிவிப்புடன் இருவரும் இணைந்து நடிக்கும் படங்களும் வெளியானது.
படத்தின் பெயர் உயர்ந்த மனிதன். இதே படத்தை இந்தியில் தி கிரேட் மேன் என்ற பெயரில் உருவாக்குவதாகவும் அறிவித்தனர். இதனை இயக்குனர் தமிழ்வாணன் இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
யார் கண் பட்டதோ தெரியவில்லை. முதல் ஷெட்யூலுடன் படம் நின்று விட்டது. தயாரிப்பு தரப்புக்கும் அமிதாப்பச்சனுக்கும் கால்ஷீட் மற்றும் சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமிதாப் படத்தில் இருந்து வெளியேறிவிட படம் டிராப் ஆனது என்றார்கள். பின்னர் இயக்குனர், அமிதாப், இடையே எழுந்த பிரச்னையால் நின்றது என்றார்கள்.
ஆனாலும் அமிதாப்பச்சனை சந்தித்து சமாதானப்படுத்துவேன். மீண்டும் அவரை நடிக்க அழைத்து வருவேன் என்று எஸ்.ஜே.சூர்யா சொல்லிக் கொண்டிருந்தார். அது இப்போது நடந்திருக்கிறது.
அமிதாப்புடன் பிரச்சினை செய்த தயாரிப்பு தரப்பு தற்போது விலகிக் கொண்டது. இந்த படத்தை புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்த நகலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.