இக்ரேன் : மொரோக்கோவில் கடந்த 1ம் தேதியன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவனின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் இக்ரேன் என்ற இடத்தில், ரயான் ஓராம் என்ற, 5 வயது சிறுவன் கடந்த 1ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.கிணற்றின் 100 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 100 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின், அங்கிருந்து சிறுவன் சிக்கியுள்ள பகுதி வரை சிறிய சுரங்கம் தோண்டும் பணி நடந்ததது.
மண் சரிந்து விடக்கூடாது என்பதால், இயந்திரங்கள் உதவியின்றி மீட்புப் படையினர் கைகளால் சுரங்கம் தோண்டினர். இதனால் மீட்புப் பணி மிக தாமதமாக நடந்தது.இந்நிலையில், சிறுவன் கிணற்றில் விழுந்து ஆறு நாட்கள் கடந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டான்.
சர்வதேச கவனம் பெற்ற இந்த துயர சம்பவம், மொரோக்கோ மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மொரோக்கோ மன்னர் ஆறாம் முகமது, சிறுவனின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இமனுவேல் மேக்ரோன் உட்பட பல்வேறு உலக தலைவர்களும், சிறுவனின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement