லதா மங்கேஷ்கர், இந்தியாவின் நைட்டிங்கேல், பிரபல பாடகி தன்னுடைய 92 வயதில் நேற்று பிப்ரவரி 6, காலை 8:12 மணிக்கு மறைந்தார். அவரது மறைவோட்டி இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க உள்ளதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி மகாராஷ்ட்ராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்திருந்தனர். சச்சின் டெண்டுல்கர், ஜாவேத் அக்தர், அனுபம் கெர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, மாதுர் பண்டர்கர், விராட் கோலி, நடிகை ஷ்ரதா, அமீர் கான், ரன்பீர் கபூர் வரிசையில் ஷாருக் கானும் அவரது செயலர் பூஜா தத்லானியும் கலந்து கொண்டனர்.
தற்போது இணையத்தில் ஷாருக் கான் மற்றும் பூஜா, மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படம் ஷாருக் கான் இரு கைகளையும் விரித்து துவா வாசிப்பது போலவும் பூஜா இரு கைகளையும் கூப்பி வணங்குவது போலவும் அமைந்திருக்கிறது. `இது தான் இந்தியா’ என்பது போலான கருத்துக்களோடு இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை நடிகையும் பா.ஜ.க -வின் பிரமுகருமான குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல பிரபலங்களும் இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு எனப் பகிர்ந்து வருகிறார்கள். அஞ்சலி செலுத்தும் போது ஷாருக் கான் முகக்கவசத்தை விலக்கி காற்றில் ஊதுவது போல பாவனை செய்ததை அவர் சிதையில் எச்சில் துப்பினார் எனச் சர்ச்சை பரவியது. அதற்கு அவரது ஆதரவாளர்கள் மறுத்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.