சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, இன்று முதல் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் எவ்வித சொத்தும் வாங்கப்போவதில்லை என்றும் எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.1 17 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் சரண்ஜித் சிங் மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்துக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்தசூழலில், சரண்ஜித் சிங் சன்னியே மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதற்கு காரணம் சரண்ஜித் தலித் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் எவ்வித சொத்தும் வாங்கப்போவதில்லை என்றும் எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்றும் சரண்ஜித் சிங் சன்னி உறுதி அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சன்னியின் நெருங்கிய உறவினர், சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இச்சூழலில், தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சொத்து வாங்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.