ஜெருசலம்:
இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா உள்பட பல நாடுகளின் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பெகாசஸ் மூலம் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் போலீசார் சட்டவிரோதமாக ஆய்வு செய்ததாக அந்நாட்டு வணிக நாளிதழ் கால்கலிஸ்ட் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, சமூக ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள், வணிகர்கள் உள்பட பலருக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நஃபாடலி பென்னட் அறிவித்துள்ளார்.
இது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மிக மோசமான நிலை என்றும், இந்த சைபர் கருவிகள் பயங்கரவாதம் மற்றும் கடுமையான குற்றங்களை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், குடிமக்களுக்கு எதிராக அவை பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஒரு வெளிப்படையான ஆழமான மற்றும் விரைவான விசாரணையை நடத்துவோம். ஏனென்றால் நாம் அனைவரும் இஸ்ரேல் நாட்டின் குடிமக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பை அடுத்து, அரசு சார்பில் விசாரணை குழு அமைக்கப்படும் என்று இஸ்ரேல் பொதுப் பாதுகாப்பு மந்திரி ஓமர் பார்லெவ் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தனித மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வரும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் பார்லெவ் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்… ஆப்கானிஸ்தானில் 50 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்