ஸ்ரீநகர்:
தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இக்கூட்டமைப்பில் இணையுமாறு இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க உள்பட 34 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நடவடிக்கையை முறியடிக்க எதிர்க்கட்சிகளை ஒரே மேடையில் நிறுத்தும் முயற்சியை பாராட்டுவதாக அக்கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்முயற்சிக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஆதரவை வழங்குகிறது என்று திருமதி முஃப்தி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்..இதையும் படியுங்கள்…சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நாட்டுக்கே நல்ல சேதி – மல்லிகார்ஜுன கார்கே