புதுடெல்லி :
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 27-ந்தேதி முறைப்படி டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த நிறுவனத்தை டாடா நிறுவனத்திடம் இருந்துதான் மத்திய அரசும் வாங்கியிருந்தது.
கடந்த 1946-ம் ஆண்டு வாங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அந்த பெயர் எப்படி சூட்டப்பட்டது? என்பது குறித்து டாடா நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தில் தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது.
அதன்படி, டாடா நிறுவன ஊழியர்களிடமே இதற்கான கருத்துக்கணிப்பு 1946-ல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்தியன் ஏர்லைன்ஸ், பான்-இந்தியன் ஏர்லைன்ஸ், டிரான்ஸ்-இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய 4 பெயர்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு அவர்கள் பணிக்கப்பட்டு இருந்தனர்.
இதில் அதிகபட்சமாக 72 வாக்குகள் ஏர் இந்தியாவுக்கும், 58 வாக்குகள் இந்தியன் ஏர்லைன்ஸ் என்ற பெயருக்கும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து நாட்டின் முதல் விமான நிறுவனத்துக்கு ‘ஏர் இந்தியா’ என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை டாடா நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.