சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.
அவ்வகையில், 2021ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்த சேரவேண்டிய இறுதி நாள் 31.12.2021 என ஏற்கெனவே செய்தி வெளியிடப்பட்டது.
தற்பொழுது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 28.02.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 28.02.2022. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008
தொடர்புக்கான தொலைபேசி எண்கள்/ மின்னஞ்சல் முகவரி: 044 – 28190412 / 044 – 28190413 [email protected]