கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம்
ஹிஜாப்
அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மாணவிகளின் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
மேலும் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்ற கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில், உடுப்பியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பர்தா, ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, குந்தபுராவில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விஜயபுராவில் உள்ள சாந்தேஷ்வர் பள்ளி வளாகத்திற்கு வந்த மாணவர்கள் சிலர் காவிக்கலர் அணிந்து வந்ததையடுத்து இன்று வகுப்புகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.