குண்டாப்பூர்:
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக, இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்தும், இந்து மாணவிகள் காவி சால்வை அணிந்தும் கல்லூரிக்கு வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசுக் கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்ததையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம், காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர். ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என்று அவர்கள் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், குண்டாப்பூர் கல்லூரிக்கு இன்றும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விஜயபுரத்தில் உள்ள சாந்தேஷ்வர் கல்வி அறக்கட்டளை கல்வி நிறுவனத்திற்கு இந்து மாணவர்கள் சிலர் சால்வை அணிந்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.