இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கோவிட்-19 தொற்று மற்றும் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கான முயற்சிகளை அதிகரிப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டது, தடுப்பு மருந்துகள் சரியாக வேலை செய்வதில்லை, அது ஆபத்தானது, ஆட்டிஸம் உள்ளிட்ட நோய்கள் வரும், தடுப்பு மருந்தைவிட கோவிட்-19 தொற்று வருவதே சிறந்தது என்பன உள்ளிட்ட பல வகையான விஷயங்களை நீக்கப்போவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் முதல் அமெரிக்காவில், ஃபேஸ்புக் தளத்தில், கோவிட்-19 தகவல் பக்கத்தில், தடுப்பூசிக்கு யார் தகுதி பெற்றவர்கள் என்பதற்கான இணைப்புகள் தரப்படவுள்ளன. மேலும், தகவல்கள் வர வர இந்தப் பக்கம் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.
“தடுப்பூசியின் மீது நம்பிக்கை கொண்டு வருவது முக்கியம். எனவே, கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பற்றிய துல்லியமான தகவல்களைப் பொது சுகாதார அமைப்புகள் பகிர ஏதுவாக உலகின் மிகப்பெரிய பிரச்சாரத்தை நாங்கள் ஆரம்பிக்கிறோம். இதன் மூலம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்களை ஊக்குவிக்கிறோம்” என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம், தன்னார்வ அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுக்கு உதவ, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல, ஃபேஸ்புக் நிறுவனம் 120 மில்லியன் டாலர்களை விளம்பர க்ரெடிட்டாக கொடுக்கிறது.
விரைவில் இன்ஸ்டாகிராமிலும் இந்தத் தகவல் பக்கம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.