தனது வார்டு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது தெரியாமல் வேட்புமனு தாக்கல் செய்யப் போயிருக்கிறார் ஓய்வுபெற்ற பெண் ஆய்வாளர் ஒருவர்; செய்வதறியாது நின்ற அவர் திடீரென்று (வேறு வார்டில்) மக்கள் நீதி மய்ய வேட்பாளராகியிருக்கிறார். இந்த சுவாரஸ்ய சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, பிரதானக் கட்சிகள், சுயேச்சைகள், சமூக ஆர்வலர்கள், லெட்டர் பேடு கட்சிகள் எனப் பல தரப்பும் வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கின்றன. இதனால், தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது.
இந்நிலையில், கடந்த, 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி என்பதால், அன்று வேட்பாளர்கள் பரபரப்பாக வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். நாமக்கல் நகராட்சி 15-வது வார்டு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த விவரம் அறியாத, அந்த வார்டில் சுயேச்சையாக போட்டியிட முடிவுசெய்த ஓய்வு பெற்ற ஆய்வாளர் ஜெயந்தி, தனது கணவரான ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி பரமேஸ்வரனுடன், வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். வேட்பு மனுவுடன் நாமக்கல் நகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்தபோது அவர், 15-வது வார்டு எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த வார்டில் பொதுப் பிரிவினர் போட்டியிட முடியாது என்றார்.
இதனால் ஏமாற்றமடைந்த ஜெயந்தி, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். வேறு வார்டில் போட்டியிடலாமா என்று கணவரோடு ஆலோசித்தார். அப்போது, ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி பரமேஸ்வரன், மக்கள் நீதி மய்யத்தின் தீவிர ஆதரவாளர் என்பதால், அந்தக் கட்சியின் சார்பில் சீட் கேட்கலாமா என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். இதையடுத்து, அந்தக் கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்தனர்.
Also Read: “நான் இங்கே விருந்துக்கு வரவில்லை!”… திமுக-வினருக்கு எதிராகக் கொதித்த ஜோதிமணி – நடந்தது என்ன?
அதைத் தொடர்ந்து, அங்கு வந்த மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் ஆதம்பாரூக், ஜெயந்தியை 13-வது வார்டில் போட்டியிடும்படி கேட்டுக்கொண்டார். அதனால், முன்னாள் ஆய்வாளரான ஜெயந்தி, தனது வேட்புமனுவை மாற்றம் செய்தார். பின்னர், 13-வது வார்டில் போட்டியிட, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகுருநாதனிடம் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து, ஜெயந்தி பரமேஸ்வரனிடம் பேசினோம்.
“எனக்கு சொந்த ஊர் சேலம். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் பணியாற்றியதால், இங்கே செட்டிலாயிட்டோம். நாமக்கல் நடராஜபுரம், 4-வது கிராஸில் வசிக்கிறேன். 1981-ம் வருடம் காவல்துறையில் பணியில் சேர்ந்தேன். கடந்த 2017-ம் ஆண்டு, நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியபோது, பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன்.
என் வார்டில் 22 வருஷமா இருக்கேன். ஆனால், இங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு ஜெயித்தவர்கள் யாரும், மக்களுக்கு எதையும் உருப்படியாக செய்யவில்லை. அதனால், இந்தத் தேர்தலில் நிற்கும்படி எங்க வார்டை சேர்ந்த மக்கள் வற்புறுத்தினாங்க. என் கணவரும் ஊக்குவிச்சார். அதனால் எங்க வார்டில் நிற்க முடிவு செஞ்சு, வேட்புமனுத்தாக்கல் செய்யப் போனோம்.
Also Read: மோதலுக்குத் தயாராகும் வேலுமணி – செந்தில் பாலாஜி; அனல் பறக்கும் கோவை உள்ளாட்சி வியூகங்கள்!
எங்க வார்டு முன்னர் 22-வது வார்டாக இருந்துச்சு. ஆனால், அது இப்போ 15-வது வார்டாக, எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட விவரம் எங்களுக்குத் தெரியலை. அங்க போனதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுச்சு. இப்போ என்ன பண்ணுறதுனு குழம்பி நின்னப்பதான், அங்க வந்த மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் ஆதம்பாரூக், மக்கள் நீதி மய்யம் சார்பில் 13-வது வார்டில் போட்டியிடக் கேட்டுக்கொண்டார். என் கணவரும் மக்கள் நீதி மய்ய ஆதரவாளர் என்பதால், உடனே அவரும் சம்மதம் தந்தார். அதனால், ஏற்கெனவே தயார் செய்திருந்த வேட்புமனுவில் வேண்டிய மாற்றத்தை செஞ்சு, 13-வது வார்டில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தேன்.
நான் பணியில் இருந்தவரைக்கும், நேர்மையாகவும், உண்மையாகவும், சின்சியராகவும் பணியாற்றினேன். என் மேல ஒரு குற்றச்சாட்டு இல்லை. ஒரு மெமோ வாங்கியதில்லை. அதனால், நேர்மையான அரசியல் பண்ண முடியும்னு நினைச்சு, கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறேன். என்னை ஜெயிக்க வைத்தால், என் வார்டை குட்டி சிங்கப்பூராக மாற்றுவேன்” என்றார்.