ஒட்டுமொத்த தேசமும் உற்றுநோக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7 -ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பேசி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால் திடீரென, மோசமான வானிலை காரணமாகப் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், காணொலி வாயிலாக மோடி பிரசாரம் மேற்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமரின் பிரசாரக் கூட்டம் ரத்தானது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி என்பவர் மோடியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக மீரட் கண்டோன்மண்ட்டில் நடந்த பேரணியில் பேசிய அவர், “பிஜ்னோரில் மின்சாரம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னரே அறிவித்திருந்த பா.ஜ.க அவற்றை முறையாக நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடி அங்குச் சென்று மக்களைச் சந்தித்திருந்தால் அவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டிருப்பார்கள். எனவேதான், பா.ஜ.க-வினருக்கு திடீரென வானிலை மோசமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும், ஜெயந்த் சவுத்ரி பிரதமர் மோடியின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக பா.ஜ.க அறிவித்தபின்பு, அவர் தனது ட்விட்டர் பதிவில் பிஜ்னோரின் வானிலை நிலவரம் குறித்த பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அத்துடன் `பிஜ்னோரில் சூரியன் பிரகாசிக்கிறது. ஆனால், பா.ஜ.க-வுக்கு மட்டும் வானிலை மோசமாக உள்ளது!” எனப் பதிவிட்டுள்ளார்.
Also Read: “தமிழ்நாட்டில் 1962-க்கு பிறகு காங்கிரஸால் ஆட்சியமைக்கவே முடியவில்லை”- ராகுலுக்கு மோடி பதிலடி!