ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் இன்று (07) அலரி மாளிகையில் நடைபெற்றது.
அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மின் நெருக்கடிக்குத் தீர்வு காணல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டன.
எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் விசேட விளக்கமளித்தார்.
குறித்த கூட்டத்தில் கௌரவ அமைச்சர் தினேஷ் குணவர்தன, கௌரவ நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், கௌரவ இராஜாங்க அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் திரு.பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு