பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் ‘கூ’ செயலிக்குத் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. வெறும் ஐந்தே நாட்களில் 9 லட்சம் பயனர்கள் புதிதாக ‘கூ’ செயலியில் இணைந்துள்ளனர்.
மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் சமீபகாலமாக முரண் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய தகவல்களைப் பதிவிட்டு வரும் கணக்குகளை முடக்காத விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. குற்றச் செயல்களைத் தூண்டும் விதமான பதிவுகளைக் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது எனவும் சட்டம் – ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவே கருத வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ட்விட்டரிடம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே இந்தியாவில் உருவான, பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்த ‘கூ’ செயலியைப் பயன்படுத்துமாறு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் தங்களின் ‘கூ’ செயலிப் பக்கத்தில் இருந்து பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ‘கூ’ செயலிக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 6 முதல் 11-ம் தேதி வரை வெறும் ஐந்தே நாட்களில் 9 லட்சம் பயனர்கள் புதிதாக ‘கூ’ செயலியில் இணைந்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன்பாக பாம்பிநேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் ‘கூ’ செயலி உருவாக்கப்பட்டது. 10 பேர் கொண்ட இந்தியப் பொறியாளர்கள் இந்தச் செயலியை உருவாக்கினர். ட்விட்டர் நிறுவனத்தின் நீலப் பறவை போலவே மஞ்சள் நிற கோழிக்குஞ்சு, சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ப்ளே ஸ்டோர்களில் மொத்தம் 26 லட்சம் பேர் ‘கூ’ செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.