திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி விழாவை காண திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு திருப்பதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ரத சப்தமி விழா நடைபெறுகிறது. ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளிப்பார்.
மினி பிரம்மோற்சவமான இதனை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். கொரோனா விதிமுறையால் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியின்றி ரதசப்தமி விழா நடக்கிறது. மேலும் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் அலிபிரியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக நேற்று திருப்பதிக்கு வந்தனர்.
அவர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல முயன்றபோது அலிபிரியில் தரிசன டிக்கெட்டுகள் இல்லாததால் தேவஸ்தான ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். டிக்கெட் இருந்தால் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் பக்தர்களுக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பக்தர்கள் அலிபிரி- கருடா சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆதார் கார்டுகள் மூலம் முகவரி எழுதிக்கொண்டு அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு செல்ல அனுமதித்தனர்.
ரதசப்தமி விழாவை காண ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் பாதயாத்திரையாக வருகிறோம். திருப்பதிக்கு வந்தவுடன் பாத யாத்திரையாக செல்லக் கூடிய பக்தர்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் தரிசனம் செய்வோம்.
கடந்த ஆண்டு டிக்கெட் வழங்காததால் இலவச தரிசனத்திற்கு வழங்கிய டிக்கெட்டுகளில் தரிசனம் செய்தோம். ஆனால் இந்த ஆண்டு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் 10 நிமிடங்களில் காலியானது இதனால் நாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போனது என்றனர்.