சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோரும், உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் உட்பட 3 பேரையும், உறுப்பினர்களாக 21 பேரையும் நியமித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி இக்கோயிலில் நேற்று நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தலைமை தாங்கினார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பங்கேற்று, கதிர் ஆனந்த் உள்ளிட்ட துணை தலைவர்கள், உறுப்பினர்களுக்கு ஆணைகளை வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சுப்பா ரெட்டி கூறியதாவது: சென்னையில் இருந்து பாத யாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி ஊத்துக்கோட்டை, சீத்தமாஞ்சேரியில் தங்கும் இடம், குளியலறை வசதி செய்யப்பட்டு வருகிறது.
சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்படும் பத்மாவதி தாயார் கோயிலுக்கு அக்டோபரில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள காலி இடத்தில் கோயில், திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளி வரும் 28-ம் தேதி கோரப்படும்.
புதுச்சேரியில் வெங்கடேசப் பெருமாள் கோயில் கட்ட புதுச்சேரி அரசிடம் மாற்று இடம் வழங்கவும், திட்டங்களுக்கு அனுமதி பெறமாநகராட்சியிடம் அனுமதி பெறவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பெருமாள் கோயில்
ஜம்மு காஷ்மீரில் அரசு வழங்கிய 66 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வரும் வெங்கடேசப் பெருமாள் கோயில் பணிகள் இந்தஆண்டு இறுதியில் நிறைவடையும்.
சென்னை தீவுத்திடல், கன்னியாகுமரியில் அடுத்த மாதம் பிரம்மாண்டமான முறையில் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.