தெலுங்கில் பாடகியான அதிதி
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. டாக்டருக்கு படித்த இவர் தற்போது நடிப்பின் மீது கொண்ட காதலால் நடிகை ஆகிவிட்டார். விருமன் படத்தில் கார்த்திக் ஜோடியாக அறிமுகமாகி உள்ள அதிதி அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க இருக்கிறார். விருமன் வெளியீட்டுக்கு பிறகு இந்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.
அதிதி முறைப்படி நடனமும், சங்கீதமும் படித்தவர். எதிர்காலத்தில் சிறந்த பாடகியாகும் திட்டத்திலும் இருக்கிறார். இந்த நிலையில் இசை அமைப்பாளர் தமன், அதிதியை பாடகியாக்கி இருக்கிறார். தமனை பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக்கியவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் தயாராகும் கானி என்ற படத்தில் ரோமியோ… ஜூலியட்… என்று தொடங்கும் காதல் பாடலை பாடி உள்ளார். இந்த படத்தில் வருண் தேஜ், நவீன் சந்திரா, நதியா, உபேந்திரா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கோரபதி இயக்குகிறார்.