டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்தார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக சென்ற பிரதமரின் வாகனம் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. இதனால் பயணம் ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே, பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உரிய விசாரணை நடத்தக்கோரி மனிந்தர் சிங் என்ற வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை கடந்த மாதம் அமைத்தது. குழுவின் உறுப்பினர்களாக பஞ்சாப் காவல்துறை தலைவர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், விசாரணையை தொடங்கியுள்ள இந்த குழு, நேற்று ஃபெரோஸ்பூருக்கு சென்றது. பிரதமரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட பகுதி, அவர் காத்திருந்த மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டது.