லூதியானா: பஞ்சாப்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராகுலின் காணொலி நேரலையை 11 லட்சம் பேர் பார்த்தனர் என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காணொலி காட்சி மூலம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், இதுபோன்ற காணொலி பிரசார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை ராகுல்காந்தி அறிவித்தார். இந்நிகழ்ச்சிகள் யாவும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டுவிட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதற்காக பஞ்சாபின் அனைத்து மாவட்டங்களிலும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பஞ்சாப்பில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில், நேற்று ராகுல்காந்தியின் காணொலி கூட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து காங்கிரசின் சமூக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லூதியானாவில் ராகுல் காந்தி ஆற்றிய உரையை, பல்வேறு சமூக ஊடங்களின் மூலமாக நேரலையாக 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். பேஸ்புக் பக்கத்தில் மட்டும் 8.8 லட்சம் பேர் பார்த்தனர். மேலும், பேஸ்புக் பக்கத்தில் 42,000 பேர் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த நேரலையானது 11 லட்சத்து 6,000 ஷேர்களை எட்டியது. பேஸ்புக் நேரலையில் மட்டும் ஒரே நேரத்தில் 90,000 பேர் பார்த்தனர். இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இதுபோன்று காணொலி பிரசாரம் அமையவில்லை’ என்று தெரிவித்துள்ளது.